வங்கிப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு வட்டார மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதியை மாற்றியுள்ள மத்திய அரசின் முடிவால், தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக வங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மாணவர்கள் ராசிக், சுரேஷ்குமார், சண்முகப்பிரியா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
நடப்பு ஆண்டில் 1,277 இடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத் துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறையை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐபிபிஎஸ் தேர்வாணையம் தளர்த்தியுள்ளது.
இதனால் வங்கித் தேர்வு முடிந்து பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் மாநில மொழித் தேர்வு நடத்துகின்றனர். இதில் மற்ற மாநிலத்தவர் தமிழகத்தில் வங்கிக்கான பணியிடங்களில் எளிதாக வெற்றி பெற்று பிறகு பிராந்திய மொழிப் பாடத்துக்கான தேர்வை எழுதுகின்றனர்.
அண்மைக் காலமாக மாநில மொழித் தேர்வு நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அரசின் இந்த முடிவால், வேற்று மொழி பேசும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றும் வங்கிகளை அணுகும் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, தற்போது நிரப்பப்பட உள்ள 1,277 பணியிடங்களையும் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த உள்ளூர் இளைஞர்கள், மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். இதற்காக வட்டார மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மனு அளிக்க இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Comments
Post a Comment